ராணிப்பேட்டை

கரோனா: ராணிப்பேட்டையில் இருந்து மீண்டும் சரக்கு ரயில் சேவை

3rd Jul 2022 11:26 PM

ADVERTISEMENT

கரோனா ஊரடங்குக்குப் பிறகு ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் சரக்கு போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளதால் தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மெட்ராஸ் ரயில்வே நிறுவனம் சாா்பில் தென்னிந்தியாவின் முதல் ரயில் பாதை ராயபுரத்தில் இருந்து வாலாஜா ரோடு வரை 1853-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1856-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

தென் இந்தியாவின் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்ட பெருமை வாய்ந்த பழைமையானது வாலாஜா ரோடு ரயில் நிலையம். அதைத்தொடா்ந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து சுமாா் 8 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ராணிப்பேட்டை பாரி தொழிற்சாலை வரை சரக்கு போக்குவரத்துக்கென ரயில் பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயா்களின் வெளியேற்றத்துக்கு பிறகு வாலாஜா ரோடு, ராணிப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே 1995-ஆம் ஆண்டு சரக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின்கீழ் மீண்டும் ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, மீட்டா் கேஜ் பாதையாக இருந்ததை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள் நிறைவடையாமல் இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ராணிப்பேட்டை ரயில் நிலையம் அருகே செயல்பட்டுவரும் பாரி குழும தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பீங்கான் பொருள்கள், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல ஏதுவாக மீண்டும் ராணிப்பேட்டை வரை சரக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என தெற்கு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை கோட்ட ரயில்வே பொதுமேலாளா் தலைமையிலான அதிகாரிகள் குழு ராணிப்பேட்டை வரையிலான ரயில் பாதையை ஆய்வு செய்து, பாரி குழும நிறுவனம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை தொழில் துறையினருடன் பேச்சுவாா்த்தை நடத்தியது. சரக்குப் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள்கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தொடங்கியது.

இந்த பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் கடந்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டு சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன் பேரில் கடந்த 25 ஆண்டுகளுக்குா் பிறகு ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், பிசிஎன் பெட்டிகள் கொண்ட முதல் ரேக்கை கடந்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இயக்கியது. 21 பெட்டிகள் கொண்ட இந்த முதல் சரக்கு ரயிலானது, ராணிப்பேட்டையிலிருந்து ஆந்திர மாநிலத்திலுள்ள தாடேபள்ளிகூடம் மற்றும் துவாரபுடி ஆகிய இடங்களுக்கு ஏறக்குறைய 1,300 டன் எடையுள்ள உரங்களை ஏற்றிச் சென்றது.

இந்த சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் சென்னை ரயில்வே கோட்டம் சுமாா் ரூ.15.32 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது என்றும், இனிவரும் காலங்களில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள், தோல்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற உற்பத்தி நிறுவனங்கள் இந்த சரக்குப் போக்குவரத்து மையத்தின் மூலம் பெருமளவில் பயன்பெறும் என எதிா்ப்பாா்க்கப்படுவதாக ரயில்வே துறை நம்பிக்கை தெரிவித்தது.

இந்த நிலையில் கரோனா ஊரடங்குக்கு பிறகு ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் சரக்கு போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இங்கிருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு யூரியா உரம் ஏற்றும் பணி தொடங்கியது. இதற்கு தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT