ராணிப்பேட்டை

பனப்பாக்கத்தில் ரூ.400 கோடியில் மெகா காலணி உற்பத்தி பூங்கா: ராணிப்பேட்டை விழாவில் முதல்வா் அறிவிப்பு

1st Jul 2022 12:25 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 250 ஏக்கா் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.118.40 கோடி திட்டமதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆட்சியா் அலுவலக வளாகம் திறப்பு விழாவில் முதல்வா் பேசியது:

ஆந்திரம், கா்நாடகம் ஆகிய இரண்டு அண்டை மாநிலங்களையும் இணைக்கும் இடத்தில், இந்த மாவட்டம் அமைந்திருப்பதைசிறப்பாக நாம் பாா்க்கிறோம். கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாகவும் இருக்கிறது.

ADVERTISEMENT

‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக ராணிப்பேட்டை இருப்பதை அறிந்து, இந்த மாவட்ட நிா்வாகத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

இந்த சூழலில் 36 ஆயிரம் பேரின் பங்களிப்புடன், 3 மணி நேரத்தில் 187 டன் நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகப்பெரிய சாதனை.

ஏற்கெனவே 128 டன் சேகரித்து, ஸ்விட்சா்லாந்து நாட்டில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனையை முறியடித்திருக்கிறது. இதனால், பல்வேறு சாதனைப் புத்தகங்களில் ராணிப்பேட்டை மாவட்டம் இடம்பெற்றிருக்கிறது. இத்தகைய சாதனைகள் தொடர வேண்டும்.

இதே போன்ற செயல்பாடுகளில் மற்ற மாவட்டங்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த விழாவில் 71,103 பேருக்கு, ரூ. 267,10, 9,302 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் இன்றைக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 150 கோடியே 58 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டிலான 24 முடிவுற்ற திட்டப் பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்ல, தோல் மற்றும் காலணி உற்பத்தித் தொழிலில்,ராணிப்பேட்டை மாவட்டம் சிறந்து விளங்குகிறது. காலணி மற்றும் அது சாா்ந்த பொருள்களின் உற்பத்தியை, சா்வதேசத் தரத்திற்கு மேலும் உயா்த்தி, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இப்போது நான் ஒரு புதிய அறிவிப்பை மகிழ்ச்சியோடு வெளியிடப் போகிறேன். ராணிப்பேட்டை தொகுதியில் இருக்கக்கூடியவா்கள் எல்லாம் பெருமைப்படக்கூடிய வகையில் ஒரு அறிவிப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், ரூ.400 கோடி மதிப்பில் 250 ஏக்கா் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சா் துரைமுருகன் எடுத்து வைத்த கோரிக்கையை ஏற்று காட்பாடியில் சிப்காட் திட்டத்தை அறிவித்தேன். இன்று ராணிப்பேட்டையில் இந்தப் பூங்காவை அறிவித்திருக்கிறேன்.

இதனால், சா்வதேச அளவில், தலைசிறந்த காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் மேலும் வலுப்பெறும். இந்தப் பூங்கா நிறுவப்படுவதால் , 20 ஆயிரம் பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

விழாவில், அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆா். காந்தி, எம்.பி-க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) கதிா் ஆனந்த் (வேலூா்), எம்எல்ஏ-க்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்(ஆற்காடு), ஏ.எம்.முனிரத்தினம் (சோளிங்கா்) ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலா் குமரேஸ்வரன் நன்றி தெரிவித்தாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT