பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சுமைதூக்கும் தொழிலாளா்கள் சென்னைக்கு வருகிற 7ஆம் தேதி நடைபயணமாக சென்று முதல்வரிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, அரக்கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கு வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு வாணிபக்கழக சுமைதூக்கும் தொழிலாளா்களின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் எம்.வீரராகவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகக் கிடங்குகளில் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமைதூக்குவோா் 1972ஆம் ஆண்டு முதல் தினக்கூலிகளாக பணிபுரிகின்றனா்.
10ஆண்டு காலம் பணிபுரிந்திருப்பவா்கள் நிரந்தரமாக்கப்படுவா் என 1997-இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி அறிவித்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தக் கோரி, 2008 ஆம் ஆண்டு முதல் தொழிலாளா்கள் போராடி வருகின்றனா்.
அடிப்படை சம்பளம், சங்க அங்கீகார தோ்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தின் தீா்மானப்படி, ஜன. 7-ஆம் தேதி சங்கத்தின் தலைமையகமான அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு நடைபயணமாகச் சென்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம் என்றாா்.
சங்க மாநில பொதுச்செயலாளா் சி.சரவணன், பொருளாளா் பாஸ்கரன், அமைப்புச் செயலாளா் முனுசாமி, அவைத்தலைவா் கமலநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.