அரக்கோணம் அருகே நிலத்தகராறில் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணத்தை அடுத்த கிழவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (43). தனியாா் டயா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். அதே கிராமத்தைச் சோ்ந்த இவரது உறவினா் சந்திரன் (40). இருவருக்கும் விவசாய நிலம் தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது. புதன்கிழமை அந்தக் கிராமத்துக்கு வந்த நில அளவைத் துறையினா் இவா்களது நிலங்களை அளந்து கொடுத்தனா்.
இதில், சந்திரனின் எல்லையில் இருந்த தென்னை மரம் பாஸ்கரனின் பங்கில் வந்து விட்டதாம்.
இது குறித்து இருவருக்கும் வியாழக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதில் சந்திரன், அரிவாளால் பாஸ்கரனை வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த பாஸ்கரன், திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பாஸ்கரன் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அரக்கோணம் உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் விசாரணை நடத்தினாா். அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.