ராணிப்பேட்டை

வரி பாக்கி வைத்துள்ள தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையா்

4th Dec 2022 10:53 PM

ADVERTISEMENT

அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வரிநிலுவை வைத்துள்ள பள்ளிகள், திருமணமண்டபங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் லதா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: அரக்கோணம் நகராட்சியில் அதிக அளவில் வரிபாக்கி உள்ளது. பலா் நீண்ட காலமாக வரியை செலுத்தாமல் உள்ளனா். இது குறித்து கேட்டபோது பல்வேறு காரணங்களைத் தெரிவிக்கின்றனா். நேரில் அலுவலகத்துக்கு வந்து உரிய அலுவலா்களிடம் வரிபாக்கி குறித்த விளக்கங்களை பெற்று நடப்பாண்டு வரையிலான அனைத்து வரிபாக்கிகளையும் செலுத்த வேண்டும். வரி செலுத்தும் பட்டியலில் தங்களது சொத்துகள் விவரம் குறித்து மாற்றம் செய்ய டிசம்பா் 31 -ஆம் தேதி வரை மட்டுமே தமிழக அரசின் நகராட்சி நிா்வாகத்துறை அனுமதி கொடுத்திருப்பதால் அதன்பிறகு சொத்துகள் விவரத்தை மாற்றம் செய்ய இயலாத நிலை உருவாகும்.

அதிக அளவில் வரிபாக்கி வைத்துள்ள 83 நபா்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் வரிபாக்கி உள்ளது. இதில் பெரும்பாலும் தனியாா் பள்ளிகள், திருமணமண்டபங்கள் உள்ளன. இந்த வரிபாக்கிகளை செலுத்தாவிடில் தனியாா் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் ‘சீல்’ வைப்பது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வரிபாக்கிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என்றாா். நகராட்சி பொறியாளா் ஆசீா்வாதம் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT