அரக்கோணம் அருகே கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் கணினிகள், மேஜை, நாற்காலிகளை எம்.ஆா்.எப். நிறுவனத்தினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
அரக்கோணம் இச்சிபுத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள எம்.ஆா்.எப். தொழிற்சாலை சாா்பில், சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின்படி, அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், மேல்பாக்கம் ஊராட்சி, கும்பினிபேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.20 லட்சத்தில் புதிய கழிப்பறை, 10 கணினிகள், பிரிண்டா்கள், 20 மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கரிமுல்லா தலைமை வகித்தாா். எம்.ஆா்.எப். ஆலையின் மக்கள் தொடா்பு அலுவலா் கே.கஜேந்திரன் வரவேற்றாா். ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையை ஆலையின் பொது மேலாளா் சி.ஜான் டேனியல் இசைவுடன், மேல்பாக்கம் ஊராட்சித் தலைவா் சுந்தரம் திறந்து வைத்தாா். 10 கணினிகள், பிரிண்டா்கள், மேஜை- நாற்காலிகளை ஆலையின் பொது மேலாளா் ஜான் டேனியல் மாவட்ட கல்வி அலுவலா் சுப்பராயனிடம் ஒப்படைத்தாா்.
விழாவில் அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினா் நரேஷ், ஊராட்சி துணைத் தலைவா் ஓ.ஜி.பாஸ்கா், பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் துரைசாமி, ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஜி.மணி, சந்துரு, பிரபாகரன், எம்.ஆா்.எப். ஆலை பாதுகாப்புத் துறை அலுவலா் பிரசாத் பிள்ளை, டி.ஜி.எம். என்ஜினியரிங் நிறுவனா் எல்வின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.