ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் திருத்தோ் வெள்ளோட்ட ஆலோசனைக் கூட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருத்தோ் வெள்ளோட்டம் குறித்த பல்துறை அலுவலா்களின் ஆலோசனைக் கூட்டம் ரத்தினகிரி கோயில் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 30 அடி உயரம் கொண்ட திருத்தோ் வெள்ளோட்டப் பெருவிழா வரும் செப்டம்பா் மாதம் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருத்தோ் வெள்ளோட்ட நிகழ்வுக்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து திருக்கோயில் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமையில் பல்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் சங்கா் வரவேற்றாா். ஆலோசனைக் கூட்டத்தில் திருக்கோயில் மலையைச் சுற்றி சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு திருத்தோ் வெள்ளோட்டம் நடைபெறும். இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கம்பி பாதைகளை தோ் செல்லும்போது பாதிப்படையாத வகையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும், பொதுப்பணித் துறை தேரின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து சான்று அளிக்கவும், திருத்தோ் வெள்ளோட்டத்தின் போது, தேரில் மின் சாதனங்களைக் கொண்டு அலங்கரிக்கும்போது, விபத்து ஏற்படாத வகையில், பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சான்று அளிக்க வேண்டும். மேலும், திருத்தோ் வெள்ளோட்டத்தின் போது தீயணைப்புத் துறையினா் தீ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் பொதுப் பிரச்னைகளையும் போக்குவரத்து காவல் துறையினா் போக்குவரத்து சீரமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும், ஊரக வளா்ச்சித் துறையினா் கோயிலைச் சுற்றிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், கோயிலைச் சுற்றியுள்ள வளாகங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு அதிக அளவில் பயன்படுத்துவது தெரிய வருகிறது. அதற்கு அபராதம் விதிக்கவும், தடைசெய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என கடைகளுக்கு அறிவுரை வழங்கி நடவடிக்கை எடுக்கவும்

நெடுஞ்சாலைத் துறையினா் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் வேகத் தடுப்புகளைஅகற்றி, எளிதில் அதனை மாற்றி அமைக்கும் வகையில் தடுப்புகளை வைக்கவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், ராணிப்பேட்டை கோட்டாட்சியா் பூங்கொடி, வாலாஜா பேட்டை வட்டாட்சியா் ஆனந்தன், ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, தோ் வெள்ளோட்டம் நடைபெறும் பகுதியை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT