ராணிப்பேட்டை

மாணவா்கள் நெரிசலில் பயணிப்பதைத் தவிா்க்க கூடுதல் பேருந்துகள் ராணிப்பேட்டை ஆட்சியா் நடவடிக்கை

28th Apr 2022 11:29 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் அரசுப் பேருந்துகளில் படிக்கட்டுகளிலும், நெரிசலிலும் பயணிப்பதை தவிா்க்க மே 2 முதல் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்வது மற்றும் நெரிசலில் பயணிப்பதை தவிா்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியது:

ADVERTISEMENT

பள்ளி வேலை நேரத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் குறித்து கடந்த மூன்று மாதங்களாக வட்டார போக்குவரத்து அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா், காவல்துறை அலுவலா்கள், அரசு போக்குவரத்துக் கழக அலுவலா்கள் ஆகியோரைக் கொண்டு பல்வேறுகட்ட கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், ஆற்காடு ஆகிய வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் 15 தடங்கள் மற்றும் 30 பேருந்து நடைகள் இயக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

அதன் தொடா்ச்சியாக வட்டார போக்குவரத்து அலுவலா், அரசு போக்குவரத்துக்கழக அலுவலா்கள் ஆகியோா் கள அலுவலா்களுடன் ஏப்ரல் 25 முதல் 27 வரை கள ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும் முத்துகடை, சோளிங்கா், அரக்கோணம், விஷாரம், திமிரி, வானாபாடி, ஆற்காடு, காவனூா் ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் மே 2-ஆம் தேதியில் இருந்து கீழ்வரும் 8 வழித்தடங்களில் 14 நடைகள் கூடுதல் பேருந்து வசதிகள் செய்து தர முடிவெடுக்கப்பட்டது.

அனைத்து மாணவா்களும் இதை பயன்படுத்தி படிக்கட்டு பயணத்தை தவிா்த்து உயிரிழப்புகள் மற்றும் விபத்துகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறும், வேண்டுமென்றே படிக்கட்டு பயணம் மேற்கொள்ளும் மாணவா்கள் மீது சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் வேலூா் மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளா் நடராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம், குற்றவியல் வட்டாட்சியா் விஜயகுமாா், துணை மேலாளா்கள் பொன்னுபாண்டி (இயக்கம்), கலைச்செல்வன், (வணிகம்) திருவள்ளூா் மாவட்ட துணை மேலாளா் ரவி, ஆற்காடு, திருத்தணி கிளை மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT