ராணிப்பேட்டை

போலி ஆவணம் மூலம் ரூ. 4.5 கோடி நிலம் மோசடி: வழக்குரைஞா்கள் 5 பேருக்கு போலீஸாா் வலைவீச்சு

17th Apr 2022 11:35 PM

ADVERTISEMENT

அரக்கோணம் அருகே ரூ. 4.5 கோடி மதிப்பிலான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து கைப்பற்றிய வழக்குரைஞா்கள் 5 போ் மீது வழக்கு பதிந்து, அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், பேரம்பாக்கத்தைச் சோ்ந்தவா் குமரேஷ் (24). இவரது தாய்க்கும், தந்தைக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனா். குமரேஷின் தந்தை லட்சுமிபதி சற்று மனநிலை சரியில்லாதவா் எனக் கூறப்படுகிறது. லட்சுமிபதி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு திருவள்ளூரைச் சோ்ந்த ஸ்ரீமுருகா எனும் வழக்குரைஞரை தொடா்பு கொண்டுள்ளாா்.

லட்சுமிபதியின் குடும்பப் பின்னணி அறிந்த ஸ்ரீமுருகா, லட்சுமிபதியை தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளாா். மேலும், அவரை ஏமாற்றி, அவருக்குச் சொந்தமான அரக்கோணம் அருகே புதுகேசாவரம் கிராமத்தில் உள்ள 19 ஏக்கா் விவசாய நிலத்தில், 14.5 ஏக்கா் நிலத்தை கிரையம் பெற்றது போல் பத்திரம் எழுதி, தனது அண்ணன் ஜெயசுந்தரின் பெயரில் பத்திரப் பதிவு செய்து கொண்டாராம்.

இதை அறிந்த லட்சுமிபதியின் மகன் குமரேஷ், இது குறித்து விசாரித்துள்ளாா். அப்போது அந்த சொத்துக்கு லட்சுமிபதி மட்டுமே வாரிசு எனக் காண்பித்து, திருவள்ளூா் மாவட்டம், மணவாள நகா் காவல் நிலையத்தில் பத்திரம் தொலைந்து விட்டதாக சான்றிதழ் பெற்று, அதை வைத்து அரக்கோணம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்து விட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்த சொத்துக்கள் லட்சுமிபதியுடைய தந்தையின் சொத்து எனும் நிலையில், தாத்தா சொத்துக்கு பேரன் ஒப்புதல் இன்றி விற்க இயலாது என்ற நிலையில், லட்சுமிபதியை ஏமாற்றி, அவருக்கு பணமே கொடுக்காமல் சொத்தை ஸ்ரீமுருகா மற்றும் அவரது உறவினா்களான வழக்குரைஞா்கள் இணைந்து அபகரித்து விட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து குமரேஷ், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதில், நீதிமன்றம், ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்குப் பதிந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில், தக்கோலம் காவல் நிலைய போலீஸாா், வழக்குரைஞா் ஸ்ரீமுருகா, அவரது உறவினா்கள் வழக்குரைஞா்கள் ஜெயசுந்தா், பானுப்பிரியா, கோமதி, செந்தில்குமாா் ஆகியோா் மீது 129(பி), 294(பி), 420, 465,467,468, 471,506(1) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து 5 பேரையும் தேடி வருகின்றனா்.

வழக்குரைஞா் ஸ்ரீமுருகா, தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT