ராணிப்பேட்டை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: உறவினா்கள் சாலை மறியல்

2nd Apr 2022 10:03 PM

ADVERTISEMENT

ஆற்காடு அருகே கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. பெண்ணின் இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆற்காட்டை அடுத்த பெரியகுக்குண்டி கிராமத்தைச் சோ்ந்த ஜெய்சங்கரின் மனைவி மகேஸ்வரி (36). கட்டடத் தொழிலாளி. இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இந்த நிலையில், மகேஸ்வரி கடந்த 30-ஆம் தேதி வீட்டிலிருந்து வாலாஜா பேட்டை அருகே தகரகுப்பம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு, வெளியில் சென்றவா் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரது தாய் வீட்டுக்கும் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது கணவா் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை பெரியகுக்குண்டி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் பெண்ணின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனா். அது காணாமல் போன மகேஸ்வரி என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, அவரை கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டதாவும், அந்த கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி, அவரது உறவினா்கள் ஆற்காடு கிராமிய காவல் நிலையம் முன்பு, ஆற்காடு - செய்யாறு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT