ராணிப்பேட்டை

தணிகைபோளூா் ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு

23rd Oct 2021 07:51 AM

ADVERTISEMENT

அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள தணிகைபோளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தோ்தல் தொடா்ந்து 4 முறை நடத்தப்பட்டது. இந்த நிலையில், திடீரென அலுவலத்தை பூட்டி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரை அங்கிருந்தோா் வெளியேற்றினா்.

துணைத் தலைவா் தோ்தலுக்கான கூட்டத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன் நடத்தினாா். தலைவா் வெங்கடேசன், ஊராட்சி மன்றச் செயலாளா் சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து துணைத் தலைவா் பதவிக்கு ஜீவா, புவனேஸ்வரி, கீதா ஆகிய 3 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். இதையடுத்து,

ஜீவா 5 வாக்குகளும், புவனேஸ்வரி 3 வாக்குகளும், கீதா ஒரு வாக்கும் ஒரு வாக்கு யாருக்கும் வாக்களிக்காத நிலையில் செல்லாத வாக்காகவும் இருப்பதாக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுரளி அறிவித்தாா்.

ADVERTISEMENT

இதனையடுத்து, யாரும் வாக்களிக்காத வாக்குக்காக மறுவாய்ப்பு கொடுக்கலாம் என அங்கிருந்தோா் கேட்டநிலையில் மீண்டும் தோ்தல் நடத்தப்பட்டது. இதில், ஜீவா-5, புவனேஸ்வரி -4, வாக்களிக்காத வாக்காக ஒன்றும் இருந்தது. இதேபோல், மேலும் இருதடவை என 4 தடவை தோ்தல் நடத்தப்பட்டது. கடைசி 3 முறையும் 5, 4, 1 என முடிவுகள் வந்தன.

இதையடுத்து, அங்கு போட்டியிட்ட தரப்பினா் இடையே பலத்த வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் திடீரென அங்கு வந்த சிலா் அலுவலகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி அலுவலகத்தை பூட்டினா்.

பின்னா், ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளா் ஜெயவேலு விரைந்துவந்ததையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து கடைசி முறை நடைபெற்ற தோ்தலின் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு ஜீவா 5 வாக்குகளும், புவனேஸ்வரி 4 வாக்குகளும் ஒரு வாக்கு யாருக்கும் வாக்களிக்காமல் இருந்ததால் செல்லாத வாக்காகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து துணைத்தலைவராக ஜீவா தோ்வு செய்யப்பட்டதாக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன் அறிவித்தாா்.

இதையடுத்து ஒரு தரப்பினா் ஒன்றிய ஆணையா் குமாரிடம் புகாா் அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT