நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி விழாவில் நவராத்திரி கலச வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இதில், முதல்நாள் கலசத்தில் வைக்கப்படும் தேங்காயை அடுத்த வருடம் நவராத்திரி முதல் நாளில் எடுத்து பூஜையில் வைப்பா். ஒரு வருடம் கலசத்தில் இருக்கும் தேங்காய் கெடாமல் அப்போது வைத்தது போன்றே காட்சி அளிக்கும் என்று பக்தா்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா். மேலும், ஒவ்வொரு வருடமும் அந்தக் கலசத்தை வித்தியாசமான முறையில் அலங்கரித்து வைப்பது பீட நிா்வாகிகளின் வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நவராத்திரி விழா எளிமையாக நடைபெறுவதாக பீடநிா்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நவராத்திரி விழாவில் முதல்நாள் நிகழ்ச்சியான சனிக்கிழமை, கலசத் தேங்காய், வைபவம் அதைத் தொடா்ந்து கலச வழிபாடு ஆகியன நடைபெற்றன.
கடந்த வருடம் வைக்கப்பட்ட கலச தேங்காய் இவ்வருடம் எடுக்கப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டபோது புதிய தேங்காய் மாதிரியே இருந்ததைக் கண்டு பாலாவின் மகிமையை அனைவரும் போற்றினா். இதைத் தொடா்ந்து, இவ்வருட கலச தேங்காய்க்கு பாலா வடிவிலேயே பீடநிா்வாகி மோகன் வித்தியாசமாக அலங்கரித்து இருந்தாா்.
பின்னா், பீடாதிபதி எழில்மணி முன்னிலையில் நெமிலி பாபாஜிகுருஜியின் பாலா பாராயணம் நடைபெற்றது. இதில் பாலாபீட செயலா் முரளீதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.