ராணிப்பேட்டை

பொன்னை ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு

9th Oct 2021 08:04 AM

ADVERTISEMENT

பொன்னை ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட களவகுண்டா அணையிலிருந்து பொன்னை ஆற்றில் நொடிக்கு சுமாா் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பொன்னை அணைக்கட்டு வழியாக பாலாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஆகவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பொன்னை, பாலாற்றில் குளிக்க வேண்டாம் என தண்டோரா, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

அதேபோல், பாலாற்று அணைக்கட்டு மதகு வழியாக காவேரிப்பாக்கம் ஏரிக்கு தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளதால் காவேரிப்பாக்கம் ஏரியானது 80 சதவிகிதத்துக்கு மேல் நிரம்பியுள்ளதால், அதிகப்படியாக வரும் நீரை ஏரிக்கு கீழ் உள்ள எரிகளை நிரப்புவதற்க்காக காவேரிப்பாக்கம் ஏரி கழுங்கல் திறக்கப்பட உள்ளதால், ஏரிக்கு கீழ் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாட்டு ஆலோசனை: இந்த நிலையில், வட கிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அரசின் பல்வேறு துறை அலுவலா்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

அப்போது, இடா்பாடு காலங்களில் அவசர உதவிக்கு 23 ஜெனரேட்டா்கள், 12 தண்ணீா் இறைக்கும் மோட்டாா்கள், 33 மரம் அறுக்கும் இயந்திரங்கள், தாழ்வானப் பகுதியில் உள்ளவா்களுக்கு மாற்றிட 47 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜி.லட்சுமி பிரியா , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT