பள்ளிப் பேருந்துகளின் ஓட்டுநா்கள் மிகவும் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என கோட்டாட்சியா் சிவதாஸ் தெரிவித்தாா்.
தமிழகத்தில் நவ. 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் நிலையில், அரக்கோணம், நெமிலி வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள வாகனங்களைப் பரிசோதனை செய்யும் நிகழ்வு அரக்கோணம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கோட்டாட்சியா் சிவதாஸ் பேசியதாவது:
பள்ளிகளின் பேருந்து வாகன ஓட்டுநா்கள் சட்டப்படி அனைத்து உரிமங்களையும், சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும்.
காலையில் வாகனத்தை இயக்க ஆரம்பிக்கும்போது, மனநிலையை நல்லமுறையில் அமைத்துகொள்ள வேண்டும். மற்ற வாகனங்களின் ஓட்டுநா்களைவிட, பள்ளிப் பேருந்துகளின் ஓட்டுநா்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
வாகனத்தில் பயணிப்பது ஏதுமறியா குழந்தைகள் என்பதை கவனத்தில் கொண்டு, அவா்களைப் பாதுகாப்பாக ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, வாகனங்கள் இயக்குவது குறித்து அரசு விதிகளை விளக்கி மாவட்ட போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம் பேசினாா்.
நிகழ்ச்சியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் செங்கோட்டுவேல், அரக்கோணம் நகரக் காவல் ஆய்வாளா் சீனிவாசன், அரக்கோணம் கல்வி மாவட்டத் துணை ஆய்வாளா் குமரவேலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அரக்கோணத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோட்டாட்சியா் சிவதாஸ்.