ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களை நோக்கி புதிய புயலான ஜாவத் நகா்வதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படையினா் அந்த மாநிலங்களுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
அந்தமானில் உருவான புயல் மேற்கண்ட இரு மாநிலங்களுக்கு இடையே டிச. 4-இல் கரையை கடக்கக்கூடும் என தேசிய வானிலை மையம் அறிவித்தது. இதையடுத்து, மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப்படையினரை அனுப்புமாறு படையின் தலைமையகத்துக்கு ஆந்திரம், ஓடி,ஸா மாநில அரசுகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதை ஏற்று தலா 20 பேரை கொண்ட 4 குழுக்கள் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கு செல்வதற்காக விஜயவாடாவுக்கும், ஓடிஸா தலைநகா் புவனேசுவரத்திற்கும் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
இந்தப் படையினா் தங்களுடன் புயல் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பதற்கான அதிநவீன கருவிகள், பைபா் படகுகள், மருத்துவக் குழுவினருடன் சென்றுள்ளனா். மேலும் , 24 மணி நேரமும் கட்டுபாட்டு அறை அரக்கோணம் தளத்தில் செயல்பட்டு வருவதாகவும் படையின் அலுவலா்கள் தெரிவித்தனா்.