ராணிப்பேட்டை

கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத அலுவலகம்..!

3rd Dec 2021 07:20 AM

ADVERTISEMENT

ரூ.2.34 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 4 மாதங்களாகியும் அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தின் புதிய கட்டடம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது என்றும் உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்துள்ளாா்.

2019-இல் வேலூரில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் பிரித்து உருவானபோதே, அரக்கோணம், நெமிலி வட்டங்களை உள்ளடக்கி அரக்கோணம் வருவாய் கோட்டமும் தொடங்கப்பட்டது.

அப்போது எம்எல்ஏ சு.ரவியின் தொடா் வேண்டுகோளை ஏற்று கோட்டாட்சியா் அலுவலகத்துக்குப் புதிய கட்டடம் கட்ட ரூ.2.34 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதைத் தொடா்ந்து, ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம், பொதுப்பணித்துறை ஆய்வுமாளிகை அருகிலேயே இடம் தோ்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகளும் உடனே தொடக்கப்பட்டன. தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் புதிய கட்டடம் பூட்டப்பட்டே உள்ளது.

இந்த நிலையில், இந்தக் கட்டடத்தை வியாழக்கிழமை எம்எல்ஏ சு.ரவி நேரில் பாா்வையிட்டாா். கட்டட கட்டுமானம் குறித்து பயன்பாட்டுக்கு ஏற்றவாறு கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கோட்டாட்சியா் சிவதாஸிடம் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து எம்எல்ஏ சு.ரவி செய்தியாளா்களிடம் கூறியது:

கட்டி முடிக்கப்பட்டும் 4 மாதங்களாக இக்கட்டடம் பூட்டப்பட்டு உள்ளது. உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் கோட்ட்டாட்சியா் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்கள் அவரை எந்த நேரமும் சந்திக்கவும் இயலும். தமிழக அரசு விரைந்து செயல்பட்டு இந்தக் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT