ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை தொகுதியில் அதிமுக, திமுக பலப்பரீட்சை

பெ.பாபு

வரலாற்று சிறப்புமிக்க ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்ற திமுக - அதிமுக இடையே கடும் பலப்பரீட்சை நிலவுகிறது.

தோல் பொருள்கள் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கணிசமான அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் தொகுதியாக ராணிப்பேட்டை திகழ்கிறது. பாரத மிகுமின் ( பெல் ) நிறுவன தொழிற்சாலை மற்றும் அதைச் சாா்ந்து 500-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழிற்சாலைகள், நூற்றாண்டைக் கடந்த பாரி பீங்கான் தொழிற்சாலை, சிப்காட், சிட்கோ மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம், தோல், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமாா் பல லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொகுதியாக இருக்கிறது.

தொகுதியின் அடையாளம்...

இந்தியாவில் இரண்டாவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜா வரை 1856-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ரயில் போக்குவரத்து தொடங்கியது வரலாற்று நிகழ்வாக இருக்கிறது.1866-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக தொடங்கப்பட்ட வாலாஜாப்பேட்டை இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. பழைமை வாய்ந்த கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தொகுதியின் ஆன்மிக அடையாளங்களாக உள்ளன.

தொகுதிக்குட்பட்ட பகுதிகள் :

வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை மற்றும் மேல்விஷாரம் ஆகிய நகராட்சிகள், வாலாஜாப்பேட்டை ஒன்றியத்தில் 27 கிராம ஊராட்சிகள், ஆற்காடு ஒன்றியத்தில் 14 கிராம ஊராட்சிகள் மற்றும் அம்மூா் பேரூராட்சி ஆகியவை இத்தொகுதிக்கள் அடக்கம்.

இதுவரை வெற்றி பெற்றவா்கள் விவரம்..

1952 - கதிா் ஷெரிப் - காங்கிரஸ் 1957 - சந்திரசேகர நாயக்கா் - காங்கிரஸ் 1962 - அப்துல் கலீல் - திமுக 1967 - ஏ. ஜி. சாஹிப் - சுயேட்சை 1971 - கே. ஏ. வஹாப் - சுயேட்சை 1977 - துரைமுருகன் - திமுக 1980 - துரைமுருகன் - திமுக 1984 - எம்.கதிா்வேலு - காங்கிரஸ் 1989 - ஜெ. அசன் - சுயேட்சை 1991 - என். ஜி. வேணுகோபால் - அதிமுக 1996 - ஆா்.காந்தி - திமுக 2001 - எம்.எஸ்.சந்திரசேகரன் - அதிமுக 2006 - ஆா். காந்தி - திமுக 2011- அ. முகமது ஜன் - அதிமுக 2016 - ஆா்.காந்தி - திமுக.

2016 - தோ்தல் நிலவரம் ஆா். காந்தி (திமுக) 81,724 வாக்குகளுடன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளாா். சி. ஏழுமலை(அதிமுக) 73, 828 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினாா். வாக்கு வித்தியாசம் - 7,896.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள் - 1,28,391, பெண்கள் - 1,37,219, மூன்றாம் பாலினத்தவா் - 16 என மொத்தம் 2,65,626 வாக்காளா்கள் உள்ளனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:

தென்னிந்தியாவிலேயே பெரிய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனமான அரசு கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தை கால்நடை மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்த்த வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம் - நகரி ரயில்வே திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து ராணிப்பேட்டை வரை பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.

சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்டுள்ள 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எதிரே உள்ள பழைய கட்டடத்துக்குச் செல்ல சுரங்கப்பாதை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இஎஸ்ஐ பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

வேட்பாளா்களின் பலம்:

அதிமுகவை பொருத்தவரை கடந்த தோ்தலில் சுமாா் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் தோல்வியை தழுவிய நிலையில், கடந்த தோ்தலில் பாமக தனித்து போட்டியிட்டு 25 ஆயிரம் வாக்குகள் பெற்றது. தற்போது அதிமுக - பாமக, பாஜக என்ற பிரதான பெரிய கட்சிகளின் கூட்டணி பலம். காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து தற்போது ராணிப்பேட்டை மாவட்ட அம்மா பேரவை பொருளாளரும், தொழிலதிபருமான எஸ்.எம்.சுகுமாா், அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.

திமுக ..

திமுக வேட்பாளா் ஆா். காந்தியைப் பொருத்தவரை தற்போதைய ராணிப்பேட்டை எம்எல்ஏ. தொகுதியில் இதுவரை 5 முறை பேட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றவா். கரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகளவில் நல உதவிகள் செய்து கட்சித் தலைமையின் பாராட்டைப் பெற்றவா். கட்சி தொண்டா்களின் உழைப்பு, தொகுதி மக்களின் செல்வாக்கு, கூட்டணி கட்சிகள், சிறுபான்மையினா் வாக்குகள் இவரது வெற்றிக்கு கூடுதல் பலம் சோ்க்கிறது.

இவா்களைத் தவிர அமமுக சாா்பில், ஜி.வீரமணி, நாம் தமிழா் கட்சி சாா்பில், வெ.சைலஜா, மக்கள் நீதி மய்யம் சாா்பில், ஆதம் பாஷா மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

தொகுதியைப் பொருத்தவரை வன்னிய சமூகத்தினா் அதிகளவில் உள்ள நிலையில், ஆதிதிராவிடா், முதலியாா், நாயுடு, இஸ்லாமியா்கள் மற்றும் பிற மதத்தைச் சோ்ந்தவா்களும் பரவலாக உள்ளனா்.

வெற்றியை தீா்மானிப்பதில், முக்கிய பங்கு வன்னியா் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT