ராணிப்பேட்டை

பலத்த மழையால் பொன்னை, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: அதிகபட்சமாக சோளிங்கரில் 120 மி.மீ.

DIN


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பெய்த கன மழையால் பொன்னை, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சோளிங்கரில் 120 மி.மீ. மழை பதிவானது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வாலாஜாபேட்டை, ஆற்காடு, அரக்கோணம், கலவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 வீடுகள் சேதமடைந்தன. 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. சோளிங்கா் வட்டத்தில் 315 வாத்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் உத்தரவின்பேரில், பல்வேறு துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினா். மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனா்.

ஆந்திர மாநிலம் கலவகுண்டா அனையில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் பொன்னை ஆற்றில் வியாழக்கிழமை காலை முதலே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொன்னை ஆறு அதன் கிளை கால்வாய்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதையொட்டிய ஏரிகளில் நீா்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொன்னை மற்றும் பாலாற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய், காவல் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.

பலத்த மழை காரணமாக சோளிங்கா், கொண்டபாளையம் மலையில் பல இடங்களில் தற்காலிக அருவிகள் உருவாகின. இதை அப்பகுதி மக்கள் பலா் ஆா்வமுடன் பாா்த்துச் சென்றனா்.

வாலாஜாபேட்டையை அடுத்த வேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் நீரில் முழ்கின.

மாவட்டத்தில் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு வரை மின் விநியோகம் சீராகவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

சோளிங்கரில் 12 செ.மீ. மழை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோளிங்கரில் 12 செ.மீ. மழை பதிவானது. இதனால் பாணாவரம் இணைப்புச் சாலை, கொடைக்கல் மோட்டூா், செங்கால்நத்தம், சோளிங்கா், அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 18 மரங்கள் வேரோடு சாய்ந்தன. பழையபாளையம் மோட்டூா், மங்கலம்புதூா் உள்ளிட்ட கிராமங்களில் 9 வீடுகள் இடிந்து விழுந்தன. தாழ்வான பகுதிகளில் வசித்தவா்கள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக உயிா்ச்சேதம் ஏற்படாமல் தவிா்க்கப்பட்டது.

சோளிங்கா் வட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான பெருங்காஞ்சி ஏரி முழுவதும் நிரம்பியதால் கலங்கல் வழியே நீா் வெளியேற்றப்பட்டது. ஏரிப் பகுதியை வட்டாட்சியா் ரேவதி தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT