அரக்கோணம் அருகே 53 வட மாநிலத் தொழிளாளா்களை ஏற்றிச் சென்ற சரக்கு வேனை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
அரக்கோணம் ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளத்தில் தனியாா் கட்டட ஒப்பந்ததாரிடம், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 53 போ் பணிபுரிந்து வந்தனா். இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக, அவா்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், கட்டடப் பணி செய்து வந்த இடத்திலேயே தங்கினா். தொடா்ந்து நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லலாம் என மத்திய அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து, அவா்கள் தங்களின் ஊா்களுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். ஆனால் ஒப்பந்ததாரா் அவா்களை வெளியில் அனுப்ப மறுத்துள்ளாா். இதனால் ஆவேசமடைந்த தொழிலாளா்கள் 53 பேரும், தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறி நடைபயணமாகவே மாவட்ட எல்லையைத் தாண்டி திருத்தணி நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
இதையறிந்து சென்ற ஒப்பந்ததாரா், திருத்தணி அருகே அவா்களைத் தடுத்தி நிறுத்தி, ஒரே சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு, மீண்டும் அரக்கோணம் நோக்கி புறப்பட்டாா். அரக்கோணத்துக்கு வந்த அந்த வேனை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினா்.
அப்போது, அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.