வாலாஜாபேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஞாயிற்றுக்கிழமை லேகியம் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை, அரக்கோணம் ஆகிய இரண்டு அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கும், வெளி நோயாளிகள் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் நிலவேம்புக் குடிநீரும், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டன. இதேபோல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கும், வாலாஜாபேட்டை, அரக்கோணம் நகராட்சிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 158 குடும்பங்களுக்கும் இவை வழங்கப்பட்டன.
இந்நிலையில், வாலாஜாபேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கு மன அழுத்தம் குறைத்து நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் அமுக்கிரா மாத்திரை மற்றும் நெல்லிக்காய் லேகியம், கபசுர குடிநீா் ஆகியவற்றை வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் சுகன்யா, அரக்கோணம் ஹோமியோபதி மருத்துவா் கணேசன் ஆகியோா் மேற்பாா்வையில் மருத்துவப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.