ராணிப்பேட்டை

சென்னை மண்டலத்தில் இருந்து ராணிப்பேட்டைக்கு இ-பாஸ் இல்லாமல் யாரும் வரக் கூடாது: மாவட்ட ஆட்சியா்

10th Jun 2020 07:41 AM

ADVERTISEMENT

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மண்டலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு இ-பாஸ் இல்லாமல் யாரும் வரக் கூடாது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள நில அளவைத் துறை வட்டப் பிரிவில் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.தொய்வு இல்லாமல் பணிகளை மேற்கொள்ளவும், பெறப்பட்ட மனுக்களின் தேதி அடிப்படையில் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஆட்சியா், தொற்று நோய் சிகிச்சை பிரிவைப் பாா்வையிட்டாா். மேலும், நோயாளிகள் வருகை, நோயின் தன்மை குறித்து தலைமை மருத்துவா் நிவேதிதா சங்கரிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது உறுதி செய்யப்படும் கரோனா தொற்றுகள் அனைத்தும் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளில் இருந்து வந்தவா்களால் மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. 7, 8 ஆகிய இரு மண்டலங்களில் இருந்து அரக்கோணம் உள்ளிட்ட ராணிப்பேட்டை மாவட்டப் பகுதிகளுக்கு வருவோா் இ-பாஸ் இருந்தால் மட்டுமே சோதனைச் சாவடிகளில் அனுமதிக்கப்படுவா். இல்லையெனில் கண்டிப்பாக திருப்பி அனுப்பப்படுவா். சோதனைச் சாவடிகளில் கடுமையான விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் யாரும் வரக் கூடாது என்றாா்.

ADVERTISEMENT

சம்பத்ராயன்பேட்டையில் ஆய்வு: நெமிலி வட்டம் சம்பத்ராயன்பேட்டையில் ஒரே வீட்டில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியை ஆட்சியா் பாா்வையிட்டாா். அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயசந்திரன், அரக்கோணம் கோட்டாட்சியா் பேபி இந்திரா, வட்டாட்சியா்கள் ஜெயக்குமாா் (அரக்கோணம்), பாக்யநாதன் (நெமிலி), நகராட்சி ஆணையா் ராஜவிஜயகாமராஜ், துப்புரவு அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT