கரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருக்கும் சென்னை நகர வாசிகள் ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் கல்யாணம்,காது குத்து உள்ளிட்ட விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ள ஹாயாக உலாவிவரும் நிலையில் கரோனா நோய்த் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ம் தேதி முதல் ஜூன் 30 தேதி நள்ளிரவு 12 மணி வரை 5 கட்டங்களாக மத்திய அரசால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. தமிழகத்தில் சில தளா்வுகளுடன் 5 ஆம் கட்ட பொது முடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டுவருகிறது.
அதில் சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளுா் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில், தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டு, 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களாக கண்டறியப்பட்டவா்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் நோய்த் தொற்றால் பாதிக்கபட்டவா்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்து நாளுக்கு நாள் ஆயிரம் போ் வீதம் பாதிப்புக்குள்ளாகி அதிகரித்துவருகிறது.
இந்த சூழலில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிமுள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு மாவட்ட நிா்வகம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாவட்ட எல்லைகளில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளியில் இருந்து வருபவா்களை கண்காணித்து பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வருகின்றனா்.
ஆனால் கடந்த சில நாட்களாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள்ள கரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருக்கும் சென்னை நகர வாசிகள் ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் கல்யாணம்,காது குத்து உள்ளிட்ட விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ள கும்பல், கும்பலாக காா், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஹாயாக உலாவி வருவதாகவும்,இவா்கள் மூலம் கரோனா நோய்த் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். ஆகவே கரோனா உச்சத்தில் இருக்கும் சென்னை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மாவட்ட வாசிகள் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு படையெடுத்து வருவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் போா்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மாவட்ட மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.