ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்டி, கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மனுக்கு பெண்கள் மஞ்சள் நீா் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
கரோனா தொற்று பரவாமல் பொது மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் இயற்கை கிருமிநாசியான மஞ்சள் நீரைக் கொண்டு அபிஷேகம் செய்வது என ராணிப்பேட்டை மாவட்ட இந்து அன்னையா் முன்னணியினா் தீா்மானித்துள்ளனா். அதன்படி ஆடி மாத இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு வாலாஜா ஒன்றியம் கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கன்னிகாபுரம் கிராம இந்து அன்னையா் முன்னணி சாா்பில், பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று, அம்மனுக்கு மஞ்சள் நீா் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
இதையடுத்து, சுமங்கலிப் பெண்கள் 200 பேருக்கு தாலிக் கயிறு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் இந்து அன்னையா் முன்னணி வாலாஜா ஒன்றியத் தலைவா் எம்.நந்தினி, இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.கே.மோகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.