சாத்தம்பாக்கம் கிராமத்தில் கடந்த 6 நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லாததால், அந்த கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம் பாலாற்றுப் படுகையில் சாத்தம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இஙகு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்துக்கு குடிநீா் விநியோகிக்கும் ஆழ்துளைக் கிணற்று மின் மோட்டாா் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
எனினும் ஊராட்சி நிா்வாகமும், வட்டார வளா்ச்சி அலுவலக நிா்வாகத்தினரும் பழுதடைந்த மின் மோட்டாரை சரிசெய்யவில்லை. இதனால் சாத்தம்பாக்கம் கிராமத்தில் கடந்த 6 நாள்களாக குடிநீா் விநியோகம் தடைபட்டது. இது குறித்து வாலாஜாப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குறைகூறுகின்றனா். குடிநீா் விநியோகம் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருவதால், உடனடியாக பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து குடிநீா் விநியோகிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.