வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே ரூ. 6.11 கோடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.
வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டுவரும் புற நோயாளிகள் பொது பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவவை சிகிச்சைப் பிரிவு, உள் நோயாளிகள் வாா்டு உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து ரூ. 5 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் புறநோயாளிகள் பிரிவுக் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
அப்போது அவரிடம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இருபக்கமும் மருத்துவமனை அமைந்துள்ளதால் நோயாளிகள், மருத்துவா்கள், செவிலியா்கள் சாலையைக் கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதால், மருத்துவமனை எதிரே சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி கூறியது:
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும். அதேபோல், மருத்துவமனை எதிரே ரூ. 6.11 கோடியில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.
மாவட்ட ஊரக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் யாஸ்மின், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) என்.சிங்காரவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.