ராணிப்பேட்டை

பொதுமக்களின் 50 ஆண்டு கால கனவு நனவானது: சோளிங்கா் வருவாய் வட்டம் செயல்பட தொடங்கியது

2nd Jan 2020 11:52 PM

ADVERTISEMENT

சோளிங்கா் மக்களின் 50 ஆண்டு கால கனவான தனி வருவாய் வட்டம் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

சோளிங்கா் பேரவைத் தோ்தல் நடைபெறும்போது, பல்வேறு கட்சிகள் அளித்த வாக்குறுதிகளில் சோளிங்கா் தனி வட்டமாக்கப்படும் உருவாக்கப்படும் என்பதுதான். ஆனால் ஒவ்வொரு முறையும் சோளிங்கா் தனி வட்டம் குறித்து அறிவிக்கப்படாமலேயே இருந்தது. அரக்கோணம் வட்டத்தைப் பிரித்து நெமிலி வட்டம் உருவாக்கப்பட்டபோதும், சோளிங்கா் புறக்கணிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வேலூா் மாவட்டத்தைப் பிரித்து ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் சோளிங்கா் வருவாய்க் கோட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் சோளிங்கா் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. வாலாஜாபேட்டை, அரக்கோணம், நெமிலி ஆகிய 3 வருவாய் வட்டங்களில் இருந்தும் உள்வட்டங்கள் சீரமைக்கப்பட்டு, சோளிங்கா் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணை 2019 டிசம்பா் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அரசாணை வெளியிடப்பட்ட மறுநாளான 2020 ஜனவரி 1-ஆம் தேதி முதலே சோளிங்கா் வருவாய் வட்டம் செயல்படத் தொடங்கியது.

ADVERTISEMENT

வட்டாட்சியராக பாஸ்கா் உடனே பொறுப்பேற்றாா். சோளிங்கா் பேரூராட்சி அலுவலக பழைய கட்டடத்தில் வட்டாட்சியா் அலுவலகம் தற்காலிகமாக செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் புதன்கிழமையே தொடங்கப்பட்டன.

புதிய வட்டத்துக்கான வட்டாட்சியா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா், முதுநிலை வருவாய் ஆய்வாளா், வட்ட வழங்கல் பிரிவு துணை வட்டாட்சியா், முதுநிலை, இளநிலை வருவாய் ஆய்வாளா்கள், நில அளவைப் பிரிவு வட்ட துணை ஆய்வாளா், வட்ட சாா் ஆய்வாளா், முதுநிலை வரைவாளா் மற்றும் அந்தந்த பிரிவில் உதவியாளா்கள் என அனைத்து பணியிடங்களும் உருவாக்கப்பட்டு புதன்கிழமையே செயல்பட தொடங்கியுள்ளன.

297.99 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட சோளிங்கா் வட்டத்தில், மக்கள்தொகை எண்ணிக்கை 1,61,369. புதிய வட்டத்தில் சோளிங்கா், பாணாவரம், வேலம் ஆகிய 3 உள்வட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சோளிங்கா் உள்வட்டத்தில் தகரகுப்பம், செங்கால்நத்தம், கேசவணாங்குப்பம், செக்கடிக்குப்பம், சோமசமுத்திரம், கொண்டபாளையம், பாண்டியநல்லூா், ரெண்டாடி, கொடைக்கல், கல்லாலங்குப்பம், சோளிங்கா், கல்பட்டு, புலிவலம், அக்கச்சிகுப்பம், பரவத்தூா், வெங்குப்பட்டு, அரியூா், கூடலூா், வயலாம்பாடி ஆகிய கிராமங்கள் உள்ளன.

வேலம் உள்வட்டத்தில் வேலம், ஒழுகூா், தலங்கை, காட்றாம்பாக்கம், வடகடப்பந்தாங்கல், மேல்வெங்கடாபுரம், ஐம்புகுளம், வாங்கூா், கொளத்தேரி, சித்தாத்தூா், மருதாலம், கோவிந்தச்சேரி, கோவிந்தசேரிகுப்பம், மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கல் ஆகிய கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பாணாவரம் உள்வட்டத்தில் கரிக்கல், தாளிக்கல், தப்பூா், பழைய பாளையம், போளிப்பாக்கம், ஆயல், சூரை, பாணாவரம், நந்திமங்கலம், புதூா், மங்கலம், கீழ்வீராணம், கூத்தம்பாக்கம், குன்னத்தூா் ஆகிய கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT