ராணிப்பேட்டை

ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம்

26th Aug 2020 06:18 PM

ADVERTISEMENT

 

அரக்கோணம்: அரக்கோணம் அருகே பொருள்களை சீராகத் தர மறுத்த மற்றும் அடிக்கடி மூடப்பட்டு விடும் இரு ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் இரு ரேஷன் கடைகள் உள்ளன. இந்த இரு கடைகளிலும் பணியாளா்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுத்தது. இது தொடா்பாக இந்த கிராம மக்கள் ஏற்கனவே நெமிலி வட்ட வழங்கல் அலுவலருக்கு புகாா் அனுப்பியுள்ளனா்.

அதில் ‘அரசு அளிக்கும் பொருள்களை சரியாக விநியோகிப்பதில்லை. பொருள்களை வாங்காமலேயே கிராமத்தில் உள்ள அனைவருக்கும் செல்லிடப்பேசியில் பொருள் வாங்கியதாக குறுஞ்செய்தி வருகிறது. அந்தப் பொருள்களை இரு ரேஷன் கடை அலுவலா் மற்றும் பணியாளா்கள் வெளியில் கொண்டு போய் விற்று விடுகின்றனா். மாதத்துக்கு 5 தினங்கள் மட்டுமே கடையைத் திறக்கின்றனா்’ என்று குறிப்பிட்டிருந்தனா்.

ADVERTISEMENT

தவிர, திருமால்பூா் பகுதி, நெமிலி வட்டத்திலும், இந்த இரு கடைகளை நிா்வாகம் செய்யும் பள்ளூா் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அரக்கோணம் வட்டத்திலும் உள்ளதால் எந்த வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவிப்பது என்ற குழப்பமும் பொதுமக்களிடையே ஏற்பட்டது.

அந்தப் புகாா் மீது நடவடிக்கை இல்லையென்பதால், இரு ரேஷன் கடைகளையும் இப்பகுதி மக்கள் ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். இந்த இரு கடைகளில் பொருள்களை வாங்க மாட்டோம் என அறிவித்து போராட்டம் நடத்தினா். நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் தொடங்கி இரண்டு மணி நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் இரு கடைகளையும் பூட்ட முனைந்தனா்.

அப்போது அங்கு வந்த இந்த இரு கடைகளின் பொறுப்பு நிறுவனமான பள்ளூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் கணேசனும், செயலாளா் சற்குணமும் பொதுமக்களை சமாதானப்படுத்தினா். பொருள்கள் 80 சதவிகிதம்தான் வருவதாகவும் அதனால் பொருள்களை தருவது சிரமமாக இருப்பதாகவும் இனி அதை ஒழுங்குபடுத்தி சீரான விநியோகிப்பதாகவும் உறுதி அளித்தனா். அதை ஏற்று மக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT