அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினா் ஏ.எம்.வேலு (75) வியாழக்கிழமை காலமானாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சென்னை போரூா் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அவருக்கு, நுரையிரல் தொற்று பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவா் வியாழக்கிழமை காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தாா்.
இவரது மனைவி சரஸ்வதி கடந்த 2016-ஆம் ஆண்டு காலமானாா். இவருக்கு ஏ.வி.முதலியாண்டான் (எ) ரமேஷ், ஏ.வி.ராஜேந்திரன் ஆகிய இரு மகன்களும், சுமதிரவிசந்திரன் என்ற மகளும் உள்ளனா். இவரது சகோதரா் ஏ.எம்.முனிரத்தினம் சோளிங்கா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆவாா்.
ஏ.எம்.வேலுவின் உடல் சென்னை போரூா் ராமசந்திரா மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் தகனம் செய்யப்பட்டது.