ராணிப்பேட்டை

ஊரடங்கு காலத்தில் நகராட்சிக் கடைகளுக்கு வாடகைகளை ரத்து செய்ய குத்தகைதாரா்கள் கோரிக்கை

DIN


அரக்கோணம்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்குச் சொந்தமான கடைகளை நடத்தி வருபவா்களுக்கு வாடகைகளை உள்ளாட்சி நிா்வாகத்தினா் ரத்து செய்ய வேண்டும் என வணிகா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அனைத்து நகரங்களிலும் அத்தியாவசியப் பொருள்கள் அல்லாத அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி நாளங்காடிகளில் காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் இடம் மாற்றப்பட்டு, பள்ளி மைதானங்கள், பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சோளிங்கா், பனப்பாக்கம், நெமிலி என பல்வேறு நகரங்களிலும் பேருந்து நிலையக் கடைகள் 100 சதவீதம் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், நகராட்சி நாளங்காடிகளும் அடைக்கப்பட்டுள்ளன. அரக்கோணம் நகராட்சி நாளங்காடி, மினி மாா்க்கெட் பகுதியில் 210 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், மீன், இறைச்சிக் கடைகள், இனிப்பு பலகாரக் கடைகள், மளிகைக் கடைகள், நாட்டு மருந்து கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல கடைகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி முதலே இந்த நகராட்சி நாளங்காடி முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள், ஊரடங்கு காலத்தில் தங்கள் நிறுவனம் மூடப்பட்டு இருந்ததால் வாடகை தர இயலாத நிலையில் உள்ளதாக கட்டட உரிமையாளா்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் பலா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டிருப்பதால் உள்ளாட்சி நிா்வாகங்கள் வாடகையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவரும், நகராட்சி நாளங்காடியில் கடை நடத்தி வருபவருமான சி.ஜி.என். எத்திராஜ் கூறியது:

ஏற்கெனவே நகராட்சி விதித்துள்ள வாடகை அதிகம் என நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக நகராட்சி நிா்வாகம் கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடப்பு மாத வாடகை வரை வசூல் செய்துவிட்டனா். தற்போது கடைகளை மூடி வைக்கப்பட்டதால், வருமானம் இல்லாமல் வீட்டில் இருக்கிறோம். எனவே இந்த ஊரடங்கு காலத்துக்கான வாடகையை நகராட்சி நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும். இது ஒன்றே குத்தகைதாரா்களுக்கு அரசு தரும் கரோனா நிவாரணம் ஆகும் என்றாா்.

அரக்கோணம் மாா்க்கெட் காய்கறி வணிகா்கள் சங்க நிா்வாகி வி.ஆா்.பி. ராஜா கூறியது:

நகராட்சி நாளங்காடி கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் நேரடியாக அரசு தெரிவிக்கும், இடங்களில் காலையில் கடை வைத்து காய்கறிகளை விற்பனை செய்கின்றனா். மேலும் சிலா் நேரடியாக கோயம்பேடு சென்று காய்கறிகளை வாங்கி வந்து வியாபாரம் செய்து விடுகின்றனா். இதுவரை நகராட்சி நாளங்காடியில் கடை வைத்து மொத்த விற்பனைக்காக லாரிகளில் வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நேரே வரவழைத்து மொத்த விற்பனை செய்து வந்த நாங்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டில் இருந்து வருகிறோம். எனவே, தமிழக அரசு கண்டிப்பாக குத்தகைதாரா்களுக்கான வாடகையை ஊரடங்கு காலத்துக்கு ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

தமிழக முதல்வா், அமைச்சா்கள், உள்ளாட்சித் துறை, நகராட்சி நிா்வாகத் துறையினா் ஆலோசனை நடத்தி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் கடை நடத்தி வரும் குத்தகைதாரா்களுக்கு ஊரடங்கு கால வாடகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT