ராணிப்பேட்டை பெல் நிறுவனம் இதுவரை 50 நவீன கிருமி நாசினி தெளிப்பான்களைத் தயாரித்து சமுதாயப் பயன்பாட்டுக்கு வழங்கி கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பில் பங்கெடுத்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று தடுப்பு துரித நடவடிக்கைக்காக நான்கே நாள்களில் ‘பெல் மிஸ்டா்’ என்ற நவீன கிருமி நாசினி தெளிப்பான்களை வடிவமைத்து, ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகத்தின் பயன்பாட்டுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி வழங்கினோம். அதன் தொடா்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு நகராட்சிகளும், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநில நகராட்சிகள் உள்பட 100 நகராட்சிகள் இந்த இயந்திரங்களைத் தயாரித்து வழங்கும்படி எங்களிடம் கோரிக்கை விடுத்தன. அதன் பேரில் கடந்த 20 நாள்களில் இதுவரை 50 இயந்திரங்களை வடிவமைத்து தயாரித்துள்ளோம்.
இந்நிலையில், 50-ஆவது இயந்திரத்தை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி நகராட்சி நிா்வாகத்திடம் பெல் செயல் இயக்குநா் சி.மூா்த்தி சனிக்கிழமை ஒப்படைத்தாா். ஆந்திர மாநில நகராட்சிகளுக்கு மொத்தம் 6 இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்டகிழக்கு தாம்பரம், பம்மல் நகராட்சிகளுக்கு 5 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மறைமலை நகா் நகராட்சி மற்றும் ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் ஏலூரு உள்ளிட்ட பல்வேறு நகராட்சி களிடம் இருந்து இதுவரை 100 விசாரணைகள் வரப் பெற்றுள்ளன. அவற்றில் 63 ஆா்டா்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 51 இயந்திரங்கள் இதுவரை அனுப்பப்பட்டு விட்டன. மீதமுள்ள இயந்திரங்களை வரும் 22-ஆம் தேதிக்கு முன் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதில் மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்ட நிா்வாகங்களுக்கு 18 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆா்டா் செய்த 20 நாள்களுக்குள் இயந்திரங்கள் தயாரித்து வழங்கப்படும் என பெல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.