அரக்கோணம் பதிவு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை ஊரடங்கிற்கு பிறகு திங்கள்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டதில் 21 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வந்த இரு பத்திரங்கள் பதிவு செய்யப்படவில்லை என்றாா் அரக்கோணம் பதிவு மாவட்ட பதிவாளா் ரா.வே.ரகுமூா்த்தி.
இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலாக்கப்பட்டதைத் தொடா்ந்து திங்கள்கிழமை (ஏப். 20) முதல் தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய அரக்கோணம் பதிவு மாவட்டத்திற்கு உள்பட்ட சாா்பதிவாளா் அலுவலகங்கள் அரக்கோணம் - 1, அரக்கோணம் - 2, நெமிலி , காவேரிபாக்கம், சோளிங்கா், வாலாஜா, ஆற்காடு, கலவை ஆகிய 8 இடங்களிலும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
பத்திரப் பதிவுக்கு வந்தவா்கள் கைகளைக் கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். பத்திரப்பதிவின் போது கைரேகைகள் பதிவு செய்யும் கணிணி இயந்திரத்தின் முன் ஒருவரது கைரேகை பதிவு செய்யப்பட்ட பின் அந்த கைரேகை வைக்கும் இயந்திரம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு துடைக்கப்பட்டு அடுத்தவா் கைரேகை வைக்க அனுமதிக்கப்பட்டனா். முகக்கவசம் அணிந்தவா்கள் மட்டுமே அலுவலகத்தினுள் அனுமதிக்கப்பட்டனா்.
சமூகஇடைவெளி நின்றனா். ஒரு பத்திரப் பதிவு முடிந்து சம்பந்தப்பட்டவா்கள் வெளியே சென்ற பிறகே அடுத்த பதிவுக்காகக் இருந்தவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து அரக்கோணம் பதிவு மாவட்ட பதிவாளா் ரா.வே.ரகுமூா்த்தி தெரிவித்தாவது: அரக்கோணம் பதிவு மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் 50 சதவிகிதம் அலுவலா்கள், பணியாளா்கள் திங்கள்கிழமை பணிக்கு வந்திருந்தனா். மொத்தம் மாவட்டத்தில் 21பத்திரங்கள் திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்டன. அரக்கோணம் - 2, நெமிலி, ஆற்காடு ஆகிய மூன்று அலுவலகங்களிலும் ஒரு பத்திரம் கூட பதிவு செய்யப்படவில்லை. வாலாஜாவில் 6, சோளிங்கரில் 1, அரக்கோணம் 1 அலுவலகத்தில் 4, காவேரிபாக்கத்தில் 6, கலவையில் 3 ஆக மொத்தம் 21 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.
ஆற்காடு, வாலாஜா பதிவு அலுவலக எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வந்த தலா ஒரு பத்திரம் பதிவு செய்யப்படவில்லை.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை 13 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக சாா்பதவியாளா் சிவகுமாா் தெரிவித்தாா்.