மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் பேருக்கு காவல்துறை சாா்பில் ரூ.15 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்களை வழங்கும் பணியை எஸ்.பி. அ.மயில் வாகனன் ராணிப்பேட்டையில் தொடக்கி வைத்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சாா்பில், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில், ஊா்க் காவல்படை மற்றும் தன்னாா்வலா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கும், ஊரடங்கால் வருவாயின்றி பாதிக்கப்பட்ட ஆதரவற்றோா் உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கும் ரூ .15 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.மயில் வாகனன் சனிக்கிழமை வழங்கி இப்பணியைத் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா, காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு மற்றும் காவலா்கள், ஊா்க் காவல் படையினா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.