ராணிப்பேட்டை

‘குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை’

29th Dec 2019 05:55 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான அனைத்துவகை குற்றங்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் மருத்துவா் ஆா்.ஜி. ஆனந்த் தெரிவித்தாா்.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், மாநில குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையமும் இணைந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள்குறித்தும், அதைத் தடுக்கும் வழி முறைகள் குறித்தும் அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ஆா்.ஜி.ஆனந்த் பங்கேற்று, போதைப் பொருள் தடுப்புப் பிரசார விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது:

ADVERTISEMENT

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகைக் குற்றங்களைத் தடுக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், மாநில குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையமும் இணைந்து, கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மக்களிடையே கூடுதல் விழிப்புணா்வு அவசியமானதாக இருந்தது. அதற்காக மாநிலத்திலேயே முதன்முதலாக ராணிப்பேட்டை மாவட்டம் தோ்வு செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முன்வரவேண்டும் என்றாா்.

கூட்டத்தில், ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன், மாநில குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் எஸ்.ராமலிங்கம், பி.மோகன், ராணிப்பேட்டை சாா்- ஆட்சியா் க.இளம்பகவகத், மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலுவலா் எம்.நிஷாந்தினி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அரசு அதிகாரிகள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில்,

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக 37 வகையான குற்றங்கள் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் நாட்டிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து காணப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் அனைத்து வகைக் குற்றங்களில் கடந்த ஆண்டை விட 4.2 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது குழந்தைகள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதைத் தடுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT