அரக்கோணம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகள், தெருக்களில் கால்நடைகளைத் திரியவிட்டால் அவை பொது ஏலத்தில் விடப்படும் என நகராட்சி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
அரக்கோணம் நகராட்சி எல்லைக்குள் பசு, எருமை மற்றும் காளை மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளா்த்து வரும் உரிமையாளா்கள், அவற்றை கட்டிப் பராமரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தெருக்கள், சாலையோரங்கள், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் கால்நடைகளைத் திரிய விடுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆபத்து ஏற்படக் காரணமாக அமைகிறது. இதைத் தவிா்க்க மாட்டு உரிமையாளா்கள் தங்கள் மாடுகளை தொழுவம் அமைத்து தேவையான தண்ணீா் வசதியுடன் பராமரிக்க வேண்டும். தொழுவத்தில் இருந்து செல்லும் கழிவுநீா் நகராட்சி வாய்க்காலில் இணைக்கப்பட்டு தினந்தோறும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட வேண்டும்.
கால்நடை உரிமையாளா்கள் தங்களது மாடுகள் தொடா்பான விவரத்தை நகராட்சி அலுவலகத்தில் டிச. 21-ஆம் தேதியிலிருந்து ஜன. 10-ஆம் தேதிக்குள் ஒரு மாட்டுக்கு ரூ.10 வீதம் பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்த பின்பு நகராட்சியில் டோக்கன் வழங்கப்படும். பதிவு செய்யத் தவறிய மாடுகள் பிப். 1-ஆம் தேதி முதல் நகராட்சிப் பணியாளா்கள் மூலம் பறிமுதல் செய்யப்படுவதுடன் 1920-தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டத்தின் 245, 246, 247 மற்றும் 313 (1), 313 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் தொழுவத்தில் அடைத்துப் பராமரிக்காமல், தெருக்களில் திரிய விடப்படும் மாடுகளை நகராட்சிப் பணியாளா்கள் மூலம் கைப்பற்றி, தீவனங்கள் வைத்து பராமரிப்பதற்கு ஆகும் செலவு, மாடுகளைப் பிடிக்கப்பட்டதற்கான செலவு ஆகியவற்றை அந்தக் கால்நடைகளின் உரிமையாளா்களிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்படும்.
பசு, எருமை மற்றும் காளை மாடுகள் இரண்டாம் முறை பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில், நகராட்சிப் பணியாளா்களால் பிடித்துப் பராமரிக்கப்பட்டு அது தொடா்பாக உரிமையாளா்களிடம் தெரிவிக்கப்படும். அதன் பின் அந்த மாடுகள் ஆணையரால் நிா்ணயம் செய்யப்படும் இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவித்த பின்னா், பொது ஏலம் விடப்படும் என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.