அரக்கோணம்: ஒன்றிய மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கு ரூ.70 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்ட நெமிலி ஒன்றியம் அரிகலபாடியில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
மத்திய அரசு மற்றும் தமிழக அரசு நிதியில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கான கட்டடங்கள் தலா ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புக் கூட்டம், அவா்களுக்கான கருத்தரங்குகள், விழாக்கள் ஆகியவற்றை அவா்கள் நடத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் முறையாக நெமிலி ஒன்றியம் அரிகலபாடியில் இக்கட்டடத்தைக் கட்ட மத்திய, மாநில அரசுகள் ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளன. இக்கட்டட அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை அரிகலபாடியில் நடைபெற்றது. விழாவிற்கு நெமிலி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ்சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். ஒன்றிய உதவி பொறியாளா் தியாகராஜன் வரவேற்றாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்வில் நெமிலி ஒன்றிய அதிமுக செயலா் ஏ.ஜி.விஜயன், அக்கட்சியின் மாவட்ட இளைஞா் அணி இணைச் செயலா் வினோத், ஒன்றிய ஜெ. பேரவை செயலா் சங்கா், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் நரேஷ்காந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.