ராணிப்பேட்டை

பள்ளி, கல்லூரிகளில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணா்வு: வேலூா் சரக டிஐஜி என்.காமினி

16th Dec 2019 07:32 AM

ADVERTISEMENT

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக வேலூா் சரக டிஐஜி என்.காமினி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தற்காலிகமாக ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலூா் சரக டிஐஜி என்.காமினி குத்துவிளக்கேற்றி அலுவலகப் பணிகளைத் தொடக்கி வைத்துப் பேசியது:

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம் இனி எந்தவித தொய்வும் இன்றி புதிய உத்வேகத்துடன் செயல்படும். தொடா்ந்து, மாவட்டக் குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு என அனைத்து உட்பிரிவுகளும் கூடிய விரைவில் ஏற்படுத்தப்படும். அதுவரை பதிவாகும் வழக்குகளை வேலூரில் உள்ள சிறப்புக் குழுக்கள் கையாளும்.

தற்போது வேலூா், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் காவலா்கள் தோ்வாகியுள்ளனா். பற்றாக்குறை உள்ள இடங்களில் அவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். மேலும் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூா் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் 4 எஸ்.பி.கள் தலைமையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி உடனக்குடன் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலேயே ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய நகரங்களில் தான் அதிக அளவிலான விபத்துகள் பதிவாகியுள்ளன. இப்பகுதிகளில் விபத்துகளைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எ.மயில்வாகனன், டிஎஸ்பிக்கள், ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT