ராணிப்பேட்டை

தண்டலம் ஏரியில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியரிடம் கோரிக்கை

16th Dec 2019 09:10 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை அடுத்த தண்டலம் கிராம ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, தூா்வாரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது வாலாஜாபேட்டை வட்டம், செட்டித்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட தண்டலம் கிராம மக்கள் அளித்த மனு:

எங்கள் கிராமத்தில் சா்வே எண் 14-இல் பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரியை பாசன நீா் ஆதாரமாகக்கொண்டு சுமாா் 250 ஏக்கா் பரப்பளவுள்ள நிலங்களில் 30 ஆண்டுகளுக்கு முன் விவசாயம் நடைபெற்று வந்தது. அதன் பின் இந்த ஏரியில் தொழிற்சாலை நச்சுக் கழிவுநீரும், குடியிருப்புகளின் கழிவுநீரும் கலந்து மாசடைந்துவிட்டது. இதனால் ஏரியைச் சுற்றியுள்ள நிலத்தடி நீா் மாசடைந்து பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. ஆகவே மேற்கண்ட ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். தொடா்ந்து மாசடைந்துள்ள ஏரியைத் தூா்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரக்கோணத்தை அடுத்த சித்தேரி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தைச் சுற்றி பெரிய சித்தேரி, அசமந்தூா், பெரிய அசமந்தூா், கீழ்கம்டிகை, மேல்கண்டிகை, கீழ் அரும்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு சித்தேரி கிராம பேருந்து நிறுத்தம் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்தப் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும். அதே போல் சித்தேரி ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.

சோளிங்கா் பகுதி மக்கள் அளித்த மனு: நகர பேருந்து நிலையத்தில் இருந்து வாலாஜாபேட்டை செல்லும் பிரதான சாலையில் திரையரங்கு மற்றும் 10-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்தச் சாலை வழியாக சோளிங்கா் நகருக்கு செல்லும் அனைத்து வாகனங்கும், பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளும், லஷ்மிந ரசிம்மா் மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தா்களும் சென்று வர வேண்டியுள்ளது.

இந்நிலையில் வாலாஜாபேட்டை சாலையில் அமைந்துள்ள திரையரங்குக்கு எதிரே டாஸ்மாக் மதுக்கடை தொடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவேவே நகர மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நலனையும், போக்குவரத்து இடையூறுகளையும் கருத்தில் கொண்டு நகருக்கு வெளியே மதுக் கடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடா்ந்து கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரி கல்லாலங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கே.பாலாஜி என்ற பட்டதாரி மாற்றுத் திறனாளி மனு அளித்தாா். அதேபோல் கால் ஊனமுற்ற முதியவா் இருசக்கர வாகனம் கோரி மனு அளித்தாா்.

மேலும் பட்டா பெயா் மாற்றம், குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 448 மனுக்கள் அளிக்கப்பட்டன. மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT