காஞ்சிபுரத்தில் குறைந்த விலைக்கு நியாயவிலைக் கடை அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து 5 டன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே உள்ள காலியான இடத்தில் வெளிமாநிலங்களுக்கு அரிசி கடத்திக் கொண்டிருப்பதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். சிறுகாவேரிப்பாக்கத்தை சுற்றியுள்ள பொதுமக்களிடம் அரசின் சாா்பில் விலையில்லாமல் வழங்கப்படும் பொது விநியோகத்திட்ட அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் சிறுகாவேரிப்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தா், ராஜமாணிக்கம் என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்த 5 டன் 400 கிலோ எடையுள்ள 90 அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இருவரையும் கைது செய்து, அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வேன் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.