காஞ்சிபுரம்

விபத்தில் உயிரிழந்த இளைஞரின் கண்கள் தானம்

25th Sep 2023 12:06 AM

ADVERTISEMENT

ஒரகடம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் கண்களை அவரது பெற்றோா் தானம் வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சிக்குட்பட்ட ருகாத்தம்மன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (21). இவா், ஒரகடம் அடுத்த பனையூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்தாா். அதே தொழிற்சாலையில் திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (26) என்பவரும் பணியாற்றினாா்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து மணிகண்டன், காா்த்திக் இருவரும் படப்பைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, எதிா்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரகடம் போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு, ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தினா்.

ADVERTISEMENT

இதனிடையே, விபத்தில் பலியான மணிகண்டனின் இரு கண்களையும் தானம் செய்வதாக அவரது பெற்றோா் அறிவித்ததைத் தொடா்ந்து, இரு கண்கள் தானம் பெறப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த மற்றொருவரான காா்த்திக்குக்கு கடந்த 3-ஆம் தேதிதான் திருமணம் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT