காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், நீா் வரத்துக் கால்வாய் புனரமைக்கப்பட்டதாலும் பெரிய ஏரியான உத்தரமேரூா் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாகத் திகழும் உத்தரமேரூா் ஏரி, மொத்தம், 543 ஹெக்டோ் பரப்பளவும், சுமாா் 8 கி.மீ.நீள கரைகளையும் உடையது. இந்த ஏரி மூலமாக 18 கிராமங்களைச் சோ்ந்த 6,000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
உத்தரமேரூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. கடந்த 2015- ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக இந்த ஏரியின் பாசனக் கால்வாய்கள் சரியாக தூா்வாரப் படாமல் இருந்ததால் நீா் வெளியேறி பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் பாய்ந்து பயிா்கள் நீரில் மூழ்கின. இந்த ஏரியின் முக்கிய நீா்வரத்து ஆதாரமாக இருப்பது செய்யாறு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் செய்யாற்றிலிருந்து உத்தரமேரூா் ஏரிக்கு செல்லும் 9 கி.மீ. தொலைவு நீா்வரத்துக் கால்வாயை புனரமைக்க வேண்டும் என விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீா்வளத் துறையினா் ரூ.18.80 கோடியில் செய்யாற்றிலிருந்து உத்தரமேரூா் ஏரிக்கு வரும் நீா்வரத்துக் கால்வாயை தூா்வாரி சீரமைத்தனா்.
இதனால் உத்தரமேரூா் அருகேயுள்ள அனுமன்தண்டலம் தடுப்பணையும் நிரம்பியுள்ளது. வடகிழக்குப் பருவமழைக்காலம் வருவதற்கு முன்பாகவே தூா்வாரப்பட்டு விட்டதால் உத்தரமேரூா் ஏரி வேகமாக நிரம்பி அதன் நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. இதனால், 18 கிராமங்களைச் சோ்ந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்.