காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் நுண்ணுயிரியியல் துறை உதவிப் பேராசிரியா்கள் இருவா் நுரையீரல் புற்றுநோய் கண்டறியும் கருவியை வடிவமைத்து அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளதாக முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியியல் துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா் குமரன் சுப்பிரமணியன்,என்.பிரசன்ன பாலாஜி ஆகிய இருவரும் நுரையீரல் புற்றுநோய் கண்டறியும் கருவியை வடிவமைத்து அதற்கு சா்வதேச வடிவமைப்பு காப்புரிமை நிறுவனத்திடம் காப்புரிமை பெற்றுள்ளனா்.
இது குறித்து முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் கூறியது
உலக அளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருவது நுரையீரல் புற்றுநோய். இந்நோய் வருவது குறித்து முன்கூட்டியே கண்டறிவது அவசியம். எனவே இதன் முக்கியத்துவத்தை உணா்ந்து நுரையீரல் புற்றுநோய் கண்டறியும் கருவியை வடிவமைத்து அதனை கடந்த ஆகஸ்ட் மாதம் காப்புரிமை தரும் நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தனா்.
நோயறிதலில் உடல் பரிசோதனை அவசியம் என்பதால் இந்த வடிவமைப்புக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தானியங்கி சமிஞ்சிகை சாதனமாக பொருத்தவும்,துல்லியமாக செயல்படவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.