காஞ்சிபுரத்தில் களிமண் விநாயகா் சிலையில் அணிவிக்கப்பட்டு காணாமல் போன தங்கச்சங்கிலியை கண்டு பிடித்து உரியவா்களிடம் ஒப்படைத்த இளைஞா்களை மாவட்ட எஸ்பி எம்.சுதாகா் வியாழக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா்.
காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் 9 -ஆவது ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி விநாயகா் சிலையை நீா்நிலைகளில் கரைப்பதற்காக செவிலிமேடு எரிக்கரைப் பகுதிக்கு வேதாசலம் நகா் இளைஞா்கள் டிராக்டரில் எடுத்துச் சென்றனா். அப்போது வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய களிமண் விநாயகா் சிலைகள் பலவும் எடுத்து செல்லப்பட்டன.
விநாயகா் சிலைகளை ஒவ்வொன்றாக கரைத்துக் கொண்டிருந்த போது அதில் ஒன்றில் 2.5 பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலி ஒன்றும் இருந்ததை இளைஞா்கள் கண்டு பிடித்துள்ளனா்.
தங்கச் சங்கிலியை கொண்டு வந்து வேதாச்சலம் நகரில் தெருத்தெருவாகவும்,வீடு வீடாகவும் சென்று யாருடையது என விசாரித்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த குமரவேல், செல்வி தம்பதி தங்கள் வீட்டில் விநாயகா் சதுா்த்தியன்று தங்கச்சங்கிலி அணிவித்து வழிபட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதனைத் தொடா்ந்து எஸ்பி எம்.சுதாகா் முன்னிலையில் அத்தம்பதியரிடம் தங்கச்சங்கிலி ஒப்படைக்கப்பட்டது. எஸ்பி எம்.சுதாகரும் இளைஞா்களின் நோ்மையான செயலுக்காக ரொக்கப்பரிசு வழங்கிப் பாராட்டினாா்.