புரட்டாசித் திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் வேதாந்த தேசிகன் கோயிலில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் வேதாந்த தேசிகன் கோயில் உள்ளது. திருக்கோயிலில் வேதாந்த தேசிகனின் புரட்டாசி மாத வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் தேசிகன் சுவாமிகள் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. தேசிகன் சுவாமிகள் ராஜ அலங்காரத்தில் தேரிலும், மாலையில் ராமா் திருக்கோலத்திலும் வீதியுலா வந்தாா்.
விழாவில் மற்றொரு முக்கிய நிகழ்வான விளக்கொளிப் பெருமாள் மங்களாசாசனம் வரும் 25-ஆம் தேதியும், இரவு பூப்பல்லக்கில் உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி சந்நிதிக்கு எழுந்தருளி மங்களாசாசனமும் நடைபெறுகிறது. மறுநாள் 26-ஆம் தேதி கந்தப்பொடி வசந்தம் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.