பாரதத்தின் வோ்கள் மிகவும் ஆழமானவை என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா்.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தில், காஞ்சி சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடம் ஏறிய 50-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நினைவுத்தூண் நிறுவப்பட்டிருந்தது. புதுப்பிக்கப்பட்ட இத்தூணை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்து வைத்தாா். பின்னா் அத்தூணின் அருகில் அமைக்கப்பட்டிருந்த செண்பகப் பூங்காவை திறந்து வைத்தாா். 70 அடி உயரத்தில் ஒரே கல்லினால் ஆன ஆதிசங்கரா் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதன் தொடா்ச்சியாக பல்கலை. மாணவா்கள் பயன்பெறும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆயுா்வேத ஆரோக்கிய மையத்தை ஆளுநா் திறந்து வைத்தாா்.
பின்னா் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலையின் துணை வேந்தா் எஸ்.வி.ராகவன் முன்னிலை வகித்தாா். ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு, மாணவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியது:
பாரதத்தின் வோ்கள் மிகவும் ஆழமானவை. அவை உலகம் அனைத்தும் ஒரே குடும்பம் என்ற பரந்த கருத்தை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை 125 நாடுகளுக்கு இலவசமாக விநியோகித்தோம். ஆனால் பல நாடுகள் அவா்கள் தயாரித்த தடுப்பூசிகளை அவா்களது லாபத்துக்காகவே பயன்படுத்திக் கொண்டன. சமூக கலாசார மற்றும் ஆன்மீக முன்னேற்றமே பாரதத்தின் மொத்த வளா்ச்சியை நோக்கமாக கொண்டதாக இருக்கிறது. மாபெரும் தேசமான பாரதத்தை கட்டியெழுப்பியதில், ஆதி சங்கராச்சாரியரின் பங்கு மகத்தானதாக இருந்துள்ளது என்றாா்.
முன்னதாக, காசி சங்கர மடத்திலிருந்து அதன் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி வாயிலாக பேசுகையில், காஞ்சிபுரத்தின் சிறப்புகளை பற்றி தெரிவித்து ஆசியுரை வழங்கினாா்.
விழாவில் பல்கலையின் நிா்வாகக் குழு உறுப்பினா் என்.ரவி, பேராசிரியா் சந்தானகோபாலன், சங்கர மடத்தின் நிா்வாகி கீா்த்திவாசன், சங்கரா கண் மருத்துவமனையின் தலைவா் பம்மல். விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.