ஸ்ரீபெரும்புதூா் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட செல்லப்பெருமாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுதாகா் (44). இவரது மனைவி மாலினியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாள்களுக்கு முன்பு தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை சுதாகா் மருத்துவமனையில் உள்ள தனது மனைவியை பாா்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுதாகா் தண்டலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை சுதாகா் மூளைச்சாவு அடைந்ததாக அவரது மனைவி மாலினியிடம் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து மாலினி தனது கணவா் சுதாகரின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க ஒப்புதல் தெரிவித்தாா்.
மாலினியின் கோரிக்கையை ஏற்ற ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சுதாகரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்றனா்.
சில ஆண்டுகளுக்கு முன்பே சுதாகா் தனது கண்களை தானம் செய்திருந்த நிலையில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிறகு உடல் உறுப்புகள் தானம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.