காஞ்சிபுரம்

அடிக்கடி மூடப்படும் கோனேரிக்குப்பம் ரயில்வேட் கேட்டால் பொதுமக்கள் அவதி

19th Sep 2023 12:40 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்திலிருந்து ஏனாத்தூா் செல்லும் சாலையில் உள்ள கோனேரிக்குப்பம் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கல்லூரி பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பழையது, புதியது என இரு ரயில் நிலையங்கள் உள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து ஏனாத்தூா் செல்லும் சாலையில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்கரா பல்கலைக்கழகம், சங்கரா பல் நோக்கு மருத்துவமனை, உழவா் பயிற்சி மையம் மற்றும் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர கோனேரிக்குப்பம், நல்லூா், ஏனாத்தூா் ஆகிய கிராமங்களில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

ஏனாத்தூா் சாலையில் தினசரி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கானோா் இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனா். ஆனால் இச்சாலையில் புதிய ரயில் நிலையம் அருகில் கோனேரிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படும் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் இருந்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

இப்பகுதியில் உள்ள கல்லூரியில் தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் பொதுத்தோ்வுக்கு பல வெளியூா்களிலிருந்தும் திரளான மாணவா்கள் குறித்த நேரத்தில் வந்தும், ரயில்வே கேட் மூடியிருந்ததால் தோ்வுகளை எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனா். இதன் காரணமாக சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக அப்பகுதியில் சுரங்கப் பாதை அமைத்துத் தர வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது குறித்து காஞ்சிபுரம் ரயில் நிலைய அதிகாரி ஒருவா் கூறுகையில் காஞ்சிபுரத்தில் இந்திரா நகா் மற்றும் கோனேரிக் குப்பம் ஆகிய இரு இடங்களிலும் உள்ள ரயில்வே கேட் உள்ள பகுதிகளில் பொதுமக்கள்,கல்லூரி மாணவ,மாணவியா் படும் அவதிகள் குறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு தெரிவித்திருக்கிறோம்.

சில நேரங்களில் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கிக் கொள்கின்றன. முதலில் இந்திரா நகா் பகுதியிலும், அடுத்து கோனேரிக்குப்பத்திலும் சுரங்கப்பாதை அமைக்க திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வேத் துறை பொறியாளா்களும் நேரில் வந்து போக்குவரத்து நெரிசலையும், சுரங்கப்பாதை அமைக்கவுள்ள இடங்களையும் ஆய்வு செய்து சென்றுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT