காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெறுங்கோழி ஊராட்சியில் மகளிா் திட்டம் மூலமாக பாலின வள மையம் என்ற பெயரில், வானவில் மையத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.
இந்த மையத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்,சிறுவா்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துதல் ஆகியவற்றுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்துதல், இலவச சட்ட உதவி ஆகியவை இந்த மையத்தின் மூலம் செய்யப்படும். இவை தவிர உடனடி உதவிகளுக்காகவும், குறுகிய கால தங்கும் வசதியுடனும் கூடிய அலுவலகமாக இந்த மையம் செயல்படும்.
இந்த மையத்தின் உதவி தொலைபேசி எண்ணாக 044-27272714 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு, உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.கவிதா, உத்தரமேரூா் ஒன்றியக் குழுவின் தலைவா் ஹேமலதா குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.