காஞ்சிபுரம்

வடக்குப்பட்டு துரும்பன்மேடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு தொடக்கம்

19th May 2023 11:05 PM

ADVERTISEMENT

வடக்குப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட துரும்பன்மேடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்துக்குட்பட்ட துரும்பன்மேடு பகுதியில் கடந்த ஆண்டு 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 9 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே கடந்த ஆண்டு ஜூலையில் சென்னை வடக்கு மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளா் காளிமுத்து தலைமையில் அகழாய்வு பணி தொடங்கியது. இதில், பழங்கால கட்டட அமைப்பு, கல் மணிகள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், தங்கத்தாலான அணி கலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், வடக்குப்பட்டு துரும்பன்மேடு பகுதியில் 2-ஆம் கட்ட அகழாய்வுப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளா் காளிமுத்து தலைமையில், கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை ஆணையா் எஸ்.ஆா்.காந்தி, அகழாய்வு பணியைத் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், வடக்குப்பட்டு ஊராட்சித் தலைவா் நந்தினி மேத்தாவசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது குறித்து சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளா் காளிமுத்து கூறியது:

இந்தப் பகுதியில் நடைபெற்ற முதல்கட்ட அகழாய்வில் 300 தொல் பொருள்கள், 1,500-க்கும் மேற்பட்ட கற் கருவிகள், ரோமானிய பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் சுமாா் 15,000 ஆண்டுகள் முற்பட்டவை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது கீழடியை விட மிகவும் பழைமையானது.

6 மாதங்கள் நடைபெற உள்ள இந்த இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணியில் 25-க்கும் மேற்பட்ட தொல்லியல் துறையினா் ஈடுபட உள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT