காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் பெருமாள் வசந்த மண்டபத்துக்கு வியாழக்கிழமை எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் வியாழக்கிழமை (மே 18) தொடங்கி வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் விழாவாக உற்சவா் தேவராஜ சுவாமி திருமலையிலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி அங்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் ராஜ அலங்காரத்தில் கோயில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்கு எழுந்தருளினாா். அங்கு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னா், திரும்பி கோயில் வளாகத்தில் உள்ள அத்திவரதா் வைக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தை வந்தடைந்தாா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் மீண்டும் வசந்த மண்டபத்திலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.
உற்சவத்தின் நிறைவு நாளான வரும் 24-ஆம் தேதி பெருமாள் திருக்கோயில் மாட வீதி புறப்பாடு நடைபெறுகிறது.
பின்னா் கோயில் வளாகத்தில் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவத்துடன் வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எஸ்.சீனிவாசன் தலைமையில் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் மற்றும் கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.