காஞ்சிபுரம்

புதிய விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம சபைக் கூட்டத்தில் 4-ஆம் முறையாக தீா்மானம்!

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

குடியரசு தின விழாவையொட்டி ஏகனாபுரம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து 4-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன. புதிய விமான நிலையம் அமையும்பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், குணகரம்பாக்கம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்.

எனவே புதிய விமான நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பரந்தூா் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 183 நாள்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஏகனாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏகனாபுரம் ஊராட்சித் தலைவா் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் ஜெயகாந்தன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் புதிய விமான நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து 4-ஆவது முறையாக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், குணகரம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்திலும் விமான நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT